Headlines

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் என்ன? பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளியிட்ட முழு விபரம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் தொடர்பான விபரங்களை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (19) புதன்கிழமை நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இந்தத் தகவல்களை வெளிப்படுத்தினார்.

பிரதமர் வெளியிட்ட தகவல்களின்படி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் பின்வருமாறு:

  • மாதாந்த கொடுப்பனவு: ரூ. 54,285.
  • பொழுதுபோக்குக் கொடுப்பனவு (Entertainment allowance): மாதம் ரூ. 1,000.
  • சாரதி கொடுப்பனவு: மாதம் ரூ. 3,500. (எனினும், பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சினால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சாரதி ஒருவர் வழங்கப்பட்டால், இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது).
  • தொலைபேசிக் கொடுப்பனவு: ரூ. 50,000.
  • போக்குவரத்துக் கொடுப்பனவு: மாதம் ரூ. 15,000.
  • அலுவலகக் கொடுப்பனவு: ரூ. 1,00,000 (ஒரு இலட்சம்).

தினசரி கொடுப்பனவுகள்:

  • நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக நாளாந்தம் ரூ. 2,500.
  • அமர்வுகள் இல்லாத நாட்களில் நடைபெறும் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக நாளாந்தம் ரூ. 2,500.

எரிபொருள் கொடுப்பனவு:

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு உள்ள தூரத்தின் அடிப்படையில் எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்படுகிறது.

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மாதத்திற்கு 419.76 லீற்றர் டீசல் என்ற அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் முதல் திகதியில் நிலவும் அங்கீகரிக்கப்பட்ட சந்தை விலைக்கு அமைய இந்தக் கொடுப்பனவு கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது.

உத்தியோகபூர்வ கடமைகள் மற்றும் போக்குவரத்து செலவுகளை ஈடுகட்டும் வகையிலேயே இந்தக் கொடுப்பனவுகள் கட்டமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதன்போது வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *