உலக சிரேஷ்ட பட்மிண்டனில் இலங்கை வரலாறு: நிலுக, சந்திரிகா உட்பட மூவர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்!
பட்டாயா: தாய்லாந்தின் பட்டாயாவில் நடைபெற்ற உலக சிரேஷ்ட பட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடரில், இலங்கை வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இத்தொடரில், இலங்கை வீரர்கள் மூன்று வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றினர்.
மகளிர் 50+ பிரிவு ஒற்றையர் இறுதிப் போட்டியில், முன்னாள் தேசிய சம்பியனான சந்திரிகா டி சில்வா, டென்மார்க் வீராங்கனையிடம் போராடித் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ஆண்கள் 35+ பிரிவு ஒற்றையர் இறுதிப் போட்டியில், ஒலிம்பிக் வீரரான நிலுக கருணாரத்ன, தாய்லாந்து வீரரிடம் மூன்று செட்கள் வரை போராடி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
கலப்பு இரட்டையர் 40+ பிரிவில், நதீஷா ஜயந்தி, இந்தோனேசிய வீரர் ஒருவருடன் இணைந்து மூன்றாவது வெள்ளிப் பதக்கத்தை இலங்கைக்குப் பெற்றுத் தந்தார். இந்த வெற்றி, இலங்கை விளையாட்டு உலகில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
