Headlines

காமேனி கொலைக்குப் பழிவாங்கல்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது ஈரான்; எண்ணெய் கப்பல் மீதும் ட்ரோன் தாக்குதல்!

தெஹ்ரான், மார்ச் 02 (திங்கட்கிழமை):

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர்ச் சூழல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் மூடியுள்ளதாக அறிவித்துள்ளது.

ஜலசந்தி மூடல் மற்றும் எச்சரிக்கை:

ஈரானின் புரட்சிகரக் காவல்படையின் (IRGC) தளபதி ஒருவரை மேற்கோள் காட்டி, ஈரானிய ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. ஜலசந்தி மூடப்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதியைக் கடக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் ஈரானின் இலக்காக மாறும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சவுதி அரேபியா, ஈரான், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற முக்கிய வளைகுடா எண்ணெய் உற்பத்தியாளர்களை ஓமான் வளைகுடா மற்றும் அரபிக்கடலுடன் இணைக்கும் மிக முக்கியமான கடல்வழிப் பாதை இதுவாகும். இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை முடக்கி, கச்சா எண்ணெய் விலையை கடுமையாக உயர்த்தும் அபாயம் உள்ளது.

எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்:

ஜலசந்தி மூடப்பட்ட அறிவிப்பு வெளியாவதற்குச் சற்று முன்னதாக, ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் எரிபொருள் தாங்கிக் கப்பல் ஒன்று ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகித் தீப்பிடித்து எரிவதாகத் தகவல்கள் வெளியாகின.

‘Athe Nova’ என்ற Honduran-flagged, 96 மீற்றர் நீளமான அந்தக் கப்பல், இரண்டு ட்ரோன்கள் மூலம் தாக்கப்பட்டதாக புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மீதான குற்றச்சாட்டு:

அந்த கப்பல் “அமெரிக்காவுடன் இணைந்து” செயல்பட்டதாகவும், அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கி வந்ததாகவும் ஈரானிய ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன. கப்பல் கண்காணிப்புத் தரவுகளும் Athe Nova அந்தக் குறிப்பிட்ட பகுதியில் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளன.

ஈரானிய இராணுவப் பேச்சாளர் ஒருவர் அரசுத் தொலைக்காட்சியில், புரட்சிகரக் காவல்படையின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து வழங்கிய அறிக்கையில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். எனினும், அது ஈரானிய ட்ரோன்களா என்பதை அவர் வெளிப்படையாகக் கூறவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து கப்பலின் உரிமையாளர் அல்லது நிர்வாகியைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *