Headlines

அமெரிக்க – தென் கொரிய கூட்டு இராணுவப் பயிற்சிக்கு வட கொரியா கடும் கண்டனம்

தென் கொரியாவில் சுமார் 18,000 வீரர்களுடன் நடைபெற்று வரும் ‘Freedom Shield’ கூட்டு இராணுவப் பயிற்சிக்கு வட கொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இப்பயிற்சியானது வட கொரியாவுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போர் ஒத்திகை எனவும், இதனால் பிராந்தியத்தில் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரி கிம் யோ ஜொங் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவின் அணு ஆயுதத் திறனைக் குறைப்பதற்கும், வட கொரியாவினால் ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கும் இந்தப் பயிற்சிகள் நடத்தப்படுவதாக அமெரிக்காவும் தென் கொரியாவும் கூறியுள்ளன.

எவ்வாறாயினும், அண்மையில் நடந்த உலகளாவிய நிகழ்வுகள், எதிரிப் படைகள் மேற்கொள்ளும் எந்தவொரு இராணுவப் பயிற்சியும் போர் ஒத்திகை என்பதை நிரூபித்துள்ளதாகக் கிம் யோ ஜொங் கூறினார். தற்காப்புக்கும் தாக்குதலுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை என்றும், எனவே வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங்கின் பதவிக் காலம் 2030 இல் முடிவடைவதற்கு முன்னர், அமெரிக்காவிடமிருந்து இராணுவக் கட்டளை அதிகாரத்தை தென் கொரியா முழுமையாகப் பெறுவதற்கும் இந்தப் பயிற்சி உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் தலைவர்களைக் குறிவைத்துத் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தப் பயிற்சி வட கொரியாவுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *