Headlines

ஈரான் மீது தரைவழி தாக்குதல்? டொனால்ட் டிரம்ப் புதிய விளக்கம்! ‘காலத்தை வீணடிக்கும் செயல்’ என மறுப்பு

வாஷிங்டன்:

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வெளித் தாக்குதல்கள் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றத்தை அதிகரித்துள்ளன. இந்த நிலையில், அமெரிக்கா ஈரானுக்குள் தரைவழிப் போரைத் தொடங்குமா? என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடியான பதிலளித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் போரில், ஏவுகணைகள், விமானங்கள், மற்றும் ட்ரோன்கள் மட்டுமே இரு தரப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தரைப்படை வீரர்கள் இன்னும் களமிறக்கப்படவில்லை. இந்த சூழலில், ஈரானுக்குள் அமெரிக்கப் படைகளை இறக்கும் திட்டம் உள்ளதா என்று டொனால்ட் டிரம்பிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த டிரம்ப், “அமெரிக்காவின் ராணுவத்தை ஈரானுக்கு இப்போது அனுப்புவது என்பது நேரத்தை வீணடிக்கும் செயலாகும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தனது முடிவிற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். டிரம்ப் கூறுகையில், “ஏனென்றால் ஈரான் இப்போதே அனைத்தையும் இழந்துவிட்டது. அந்த நாட்டின் ராணுவம் முற்றிலும் பலவீனமடைந்துள்ளது. அவர்கள் தங்களின் கடற்படையை இழந்துவிட்டார்கள். அவர்கள் இழக்கக் கூடாது என நினைத்த அனைத்தையும் இழந்துவிட்டார்கள்” என்று கூறினார்.

ஈரான் மற்றும் இஸ்ரேல் தரப்பின் நிலைப்பாடு:

டிரம்பின் இந்தக் கருத்திற்கு முன்னதாக, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தார். “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் தரைவழிப் போரை முன்னெடுத்தால், அந்த நாட்டின் படை வீரர்கள் பேரிழிவைச் சந்திப்பார்கள்” என்று அவர் கூறியிருந்தார்.

இதேபோன்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப்படாது என்பதை முன்னரே உறுதிப்படுத்தியிருந்தார். அமெரிக்க அதிபர் டிரம்பும் இப்போது அதனைத் உறுதிப்படுத்தியிருப்பது, தற்போதைய போரில் சற்று ஆறுதலான விஷயமாகக் கருதப்படுகிறது.

ஏன் இது முக்கியம்?

ஈரானுக்குள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் இறங்கினால், அது ஒரு நீண்ட காலப் போராக மாறும். இது ஈரானுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தொடரச் செய்யும். உலக நாடுகளின் கச்சா எண்ணெய் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார வர்த்தகங்களும் இதனால் நேரடியாகப் பாதிக்கப்படும் என்பதால், தரைவழிப் போர் தவிர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *