துபாய்: அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் 4-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு, ஈரான் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.
டிரம்பின் எச்சரிக்கை: ஹார்முஸ் நீர்சந்தி மூடப்பட்டதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், “ஈரான் உடனடியாக நீர்சந்தியைத் திறக்க வேண்டும். இல்லையெனில், அந்நாட்டின் பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்,” என்று எச்சரித்திருந்தார்.
ஈரானின் அதிரடி பதிலடி: அமெரிக்காவின் இந்த எச்சரிக்கைக்கு பதிலளித்துள்ள ஈரான், “எங்கள் மின் கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், பதிலுக்கு அமெரிக்காவின் நட்பு நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (துபாய் உட்பட), பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகியவற்றின் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களை (Desalination Plants) இலக்கு வைத்து தாக்குவோம்,” என்று அதிரடி வார்னிங் கொடுத்துள்ளது.
ஏற்படப்போகும் ஆபத்து என்ன? வளைகுடா நாடுகள் பெரும்பாலும் பாலைவனப் பகுதிகள் என்பதால், தங்களின் குடிநீர் தேவைக்கு 70 முதல் 90 சதவீதம் வரை கடல்நீரைச் சுத்திகரித்தே பயன்படுத்துகின்றன. ஈரானின் எச்சரிக்கை நிறைவேற்றப்பட்டால், துபாய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.
தற்போது வளைகுடா நாடுகளில் 1.5 லிட்டர் குடிநீர் பாட்டில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 முதல் ரூ.65 வரை விற்கப்படுகிறது. போர்ச்சூழலால் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டால், குடிநீர் விலை 5 முதல் 10 மடங்கு வரை உயர்ந்து, ஒரு பாட்டில் ரூ.420 வரை விற்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் தவிக்கும் மக்கள், இப்போது குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற பீதியில் உள்ளனர்.
