ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘மிதிகம சூட்டி’ என்று அழைக்கப்படும் பிரபாத் மதுசங்க, இன்று காலை (30) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
ஓமானில் கைது செய்யப்பட்டிருந்த இவர், விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) அழைத்து வரப்பட்டார்.
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ‘மிதிகம சூட்டி’க்கு எதிராக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஓமான் பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். இவரை நாட்டுக்கு அழைத்து வர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) மூன்று உத்தியோகத்தர்கள் ஓமானுக்குச் சென்றிருந்தனர்.
சலாம் எயார் OV-437 விமானத்தின் மூலம் இன்று அதிகாலை 4.27 மணிக்கு அவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் அவரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்திற்கு அவர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
