Headlines

பாதுகாப்பு அமைச்சுக்கான ஆலோசனைக் குழு கூட்டம்: வடக்கு, கிழக்கு காணி விடுவிப்பு மற்றும் அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி அநுர முக்கிய கலந்துரையாடல்

பாதுகாப்பு அமைச்சுக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டம், பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது, இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்தும், வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிப்பதிலும், மூடப்பட்டுள்ள வீதிகளை மீண்டும் திறப்பதிலும் நிலவும் சவால்கள் மற்றும் அதற்கான சாத்தியமான ஆக்கபூர்வமான தீர்வுகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத ஸ்தலங்களுடன் தொடர்புடைய காணிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார்.

மேலும், ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் சேதமடைந்த வீதிகள் மற்றும் நீர்ப்பாசனத் தொகுதிகளை புனரமைப்பது குறித்தும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

2025 ஆம் ஆண்டில் மாத்திரம் வடக்கு மாகாணத்தில் சுமார் 1,000 ஏக்கர் தனியார் காணிகள் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி திஸாநாயக்க, எஞ்சியுள்ள காணிகளையும் முறைப்படியாக விடுவிப்பதற்கான திட்டங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான காணிகள் விடுவிக்கப்பட்டு வரும் அதேவேளை, கைத்தொழில் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்காக காணி வளங்களை நிர்வகிப்பதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என வலியுறுத்திய ஜனாதிபதி, இது குறித்து மேலதிக நடவடிக்கைகளை ஆராயுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் நலன்புரி விவகாரங்கள், பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் இணைந்த நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஒழுங்குவிதிகளுக்கு ஆலோசனைக் குழுவின் அனுமதி பெறப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இக்கூட்டத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *