Headlines

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அன்பளிப்பு மற்றும் பணம் பெறத் தடை! பொலிஸ் மா அதிபர் அதிரடி உத்தரவு; 17 பொறுப்பதிகாரிகள் இடமாற்றம்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக அன்பளிப்புகளைப் பெறுவது மற்றும் பண வசூலில் ஈடுபடுவது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் விசேட பணிப்புரைகளை விடுத்துள்ளார்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவதற்காக பல பொலிஸ் நிலையங்கள் அதிகாரிகளிடம் இருந்து பணத்தை வசூலிக்கத் தயாராகி வருவதாகவும், வர்த்தக சமூகத்தின் பங்களிப்புடன் புத்தாண்டு விருந்துகளை ஏற்பாடு செய்யத் தயாராகி வருவதாகவும் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு நல்லெண்ணத்தின் அடிப்படையில் வழங்கப்படும் அன்பளிப்புப் பொதிகள் (Hampers) அல்லது பரிசு வவுச்சர்களை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளக் கூடாது எனவும், சிரேஷ்ட அதிகாரிகள் அதனைத் தம் வசம் வைத்திருக்கக் கூடாது எனவும் பொலிஸ் மா அதிபர் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மேலும், வெளி நபர்கள் அல்லது வர்த்தக சமூகத்தின் நிதியுதவி அல்லது ஆதரவுடன் பொலிஸ் நிலையங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தக் கூடாது எனவும் குறித்த அறிவுறுத்தல்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், பொலிஸ் நிலையங்களில் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்ட நடவடிக்கைகளுக்காகப் பொலிஸ் நலன்புரி நிதியத்தில் இருந்து ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிக்கும் 250 ரூபாயை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல்களை மீறிச் செயல்படும் எந்தவொரு அதிகாரிக்கும் எதிராகக் கண்காணிப்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

17 பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம்

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள 17 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் (OIC) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முழுமையான அனுமதியுடனேயே இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *