Headlines

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று விவாதத்திற்கு

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, இன்று (10) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினரால் இந்தப் பிரேரணை அண்மையில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

எரிசக்தித் துறையின் நிர்வாகம் தொடர்பாக அரசியலமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் சரியாகப் பயன்படுத்தத் தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட இந்தப் பிரேரணை, கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. நொச்சோலையில் உள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான போதுமான மற்றும் தரமான நிலக்கரியைக் கொள்வனவு செய்வதை உறுதி செய்வதற்கான தனது முதன்மைக் கடமையை எரிசக்தி அமைச்சர் நிறைவேற்றத் தவறிவிட்டார் என அதில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முக்கியமான தேசிய எரிசக்தி சொத்தொன்றை மேற்பார்வையிடுவதில் இத்தகைய அலட்சியம் காட்டுவது, அமைச்சரின் பொறுப்பை மீறும் அடிப்படைச் செயல் என்றும் அந்தப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கொள்வனவு மேலாளராகப் பணியாற்றியபோது ‘ஊழல் நடவடிக்கையில்’ ஈடுபட்டதாக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) இலஞ்சச் சட்டத்தின் 70வது பிரிவின் கீழ், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எரிசக்தி அமைச்சருக்கு எதிராகப் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் இந்தப் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *