ஜனாதிபதி தலைமையில் கடவத்தை – மீரிகம அதிவேக நெடுஞ்சாலை வேலைகள் ஆரம்பம்
கொழும்பு: பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டிருந்த மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை – மீரிகம பகுதியின் நிர்மாணப் பணிகள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சற்று முன்னர் உத்தியோகப்பூர்வமாக மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
2022ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்தப் பணிகள், சீன ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து பெறப்பட்ட 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கு சமமான யுவான் கடனுதவியின் மூலம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கமும் இத்திட்டத்திற்காக 8.6 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.
37 கிலோமீற்றர் நீளமான இந்தப் பகுதி, 2028ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய அங்குரார்ப்பண நிகழ்வில், கடவத்தை இடமாறி மற்றும் முதல் 500 மீற்றர் பகுதிக்கான வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. நாட்டின் முக்கிய அபிவிருத்தித் திட்டம் இதுவாகும்.
