பாடசாலைகள் பிள்ளைகள் அன்பையும் கவனிப்பையும் பெறும் பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான சூழல்களாக மாற்றப்படுவதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது என பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (20) தெரிவித்தார்.
புதிய திட்டமொன்றின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், பாடசாலைகளுக்குள் சாதகமான உளசமூகச் சூழலை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்த இலக்கை அடைவதற்கு கல்வித் துறையிலுள்ள அனைத்து அதிகாரிகளும் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சு மற்றும் ‘ரூம் டு ரீட்’ (Room to Read) ஸ்ரீலங்கா ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டம், மாணவர்களின் உளசமூக நலனை மேம்படுத்துவதோடு, அவர்களைத் தரமான தொழில் வழிகளை நோக்கி வழிநடத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது, மாணவர் ஆலோசனை மற்றும் தொழில் வழிகாட்டல் தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டன. இந்த வழிகாட்டுதல்களில் ஆலோசனை ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சித் தொகுப்புகள், நிர்வாகக் கையேடுகள் மற்றும் நவீன காலத்திற்கான திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் பயிற்சித் தொகுப்புகள் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் ஆலோசனை ஆசிரியர்களுக்கான பயிற்சி அமர்வுகள், மாணவர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பெற்றோரின் பங்களிப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
கல்வியின் பரந்த பங்களிப்பை வலியுறுத்திய பிரதமர், பொறுப்புள்ள பிரஜைகளை வளர்ப்பது கல்வியின் பிரதான இலக்காகத் தொடர்கிறது என்றும், பாதுகாப்பான மற்றும் ஆதரவான பாடசாலைச் சூழலை உறுதி செய்வது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என்றும் தெரிவித்தார் என பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
