இந்த உரையாடலின் போது, ‘IRIS Dena’ கப்பலின் மாலுமிகளை மீட்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் மற்றும் ‘IRIS Dena’ கப்பலின் பணியாளர்கள் மற்றும் ஏனைய ஈரானிய கடற்படை வீரர்களின் உடல்களை மீண்டும் ஈரானுக்கு மாற்றுவதற்கு உதவியமைக்காக இரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி பாராட்டுத் தெரிவித்தார் என இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
இரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இழைத்ததாகக் கூறப்படும் குற்றங்களை கோடிட்டுக் காட்டிய இரானிய வெளிவிவகார அமைச்சர், ‘IRIS Dena’ மீதான தாக்குதலை அமெரிக்காவின் “முன்னோடியில்லாத போர்க்குற்றம்” என்று விவரித்தார். சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் அடிப்படை விதிகள் மற்றும் 1949 ஜெனீவா மாநாடுகளைக் கடுமையாக மீறும் இந்தக் குற்றத்தை இரானிய தேசம் ஒருபோதும் மறக்காது என்றும், குற்றவாளிகள் மற்றும் பொறுப்பானவர்களைப் பொறுப்புக்கூறச் செய்து அவர்களை நீதியின் முன் நிறுத்த அனைத்து சட்ட மற்றும் அரசியல் வழிமுறைகளையும் பயன்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அமைச்சர் அரக்ச்சி மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடினர் என்று இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
