Headlines

டீட்வா புயல் இழப்பீடு: மே இறுதிக்குள் வழங்க ஜனாதிபதி உத்தரவு

டீட்வா புயலால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு அரசாங்கம் அங்கீகரித்துள்ள 500,000 ரூபாய் இழப்பீட்டுத் தொகையை, விதிவிலக்கான சூழ்நிலைகளைத் தவிர்த்து, அனைத்துப் பயனாளிகளுக்கும் எதிர்வரும் மே மாத இறுதிக்குள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்று காலை (22) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற முன்னேற்றப் பரிசீலனைக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் டீட்வா புயலால் பகுதியளவில் அல்லது முழுமையாக சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை வழங்குதல் தொடர்பில் கவனம் செலுத்தியது.

நிரந்தர வீடுகள் வழங்கப்படும் வரை முகாம்களில் தங்கியுள்ள மக்களை தற்காலிக வீடுகளுக்கு மாற்றுவது குறித்தும் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. தகுந்த இடங்களை அடையாளங்கண்டு, இந்த செயல்முறையை விரைவில் முடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். அதே சமயம், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது குறித்தும் அவர் கவனம் செலுத்தினார்.

மேலும், புதிய வீடுகளை வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு இழப்பீடு பெற விரும்பாத குடியிருப்பாளர்களுக்கு வீட்டுத் தொகுதிகளை அமைப்பதற்கான திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோகா பண்டார, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கே. ஜி. தர்மதிலக ஆகியோருடன் மேலும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *