சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தல் களம் இதுவரை கண்டிராத பரபரப்பை எட்டியுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், திமுக கூட்டணியின் முக்கிய அங்கமான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் அண்மைக்காலப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
கரைசேருமா ‘கருத்துக்கணிப்பு’ கனவுகள்?
தேர்தலுக்கு முன் விஜய்யின் கூட்டங்கள் வெறும் வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் என்றும், அது ஓட்டாக மாறாது என்றும் பல அரசியல் விமர்சகர்கள் கணித்திருந்தனர். ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தவெகவுக்கு சுமார் 15 இடங்கள் வரை கிடைக்கும் எனக் கூறி, அவர்களுக்கு ஒரு பெரிய பூஸ்டைக் கொடுத்துள்ளன.
இதில் ஆக்ஸிஸ் – மை இந்தியா வெளியிட்ட எக்சிட் போல் கணிப்பு, அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. அக்கணிக்கின்படி, தவெக தனிப் பெரும்பான்மையுடன் 120 இடங்கள் வரை வென்று ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள், முன்னணி கட்சிகள் மட்டுமன்றி, பல்வேறு தரப்பினருக்கும் பெரும் வியப்பை அளித்துள்ளது. அதேநேரத்தில், பெரும்பாலான ஊடகங்கள் திமுக அதிக இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றும், சில ஊடகங்கள் அதிமுக வெல்லும் என்றும் கணித்துள்ளன. மே 4-ஆம் தேதி என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
வைகோவின் இருமுனைப் பேச்சு: சலசலப்பில் திமுக கூட்டணி!
இந்த பரபரப்பான சூழலில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் வைகோ, தவெகவை ஒரு “முக்கியமான சக்தி” என்று வர்ணித்து பரபரப்பைக் கூட்டினார். “தேர்தல் முடிவுகளில் விஜய்யின் தவெக ஆச்சரியங்களை ஏற்படுத்தும். மாணவர்களும், முதல்முறை வாக்காளர்களும் தவெகவுக்கு அமோக ஆதரவு அளித்து வருகின்றனர்” என்று அவர் கூறியுள்ளார்.
ஆயினும், தவெகவை புகழ்ந்த வைகோ, தனது கூட்டணிக் கடமையையும் மறக்கவில்லை. “தியாகத்தால் உருவானது திராவிட இயக்கம், அதை ஒருபோதும் அழிக்க முடியாது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணும்போதுதான் உண்மை தெரியவரும். திமுகதான் அதிக இடங்களில் வென்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்பது எனது உறுதியான கணிப்பு” என்றும் அவர் சமரசம் செய்துள்ளார்.
திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் தவெக ஒரு பொருட்டே அல்ல என கூறி வரும் நிலையில், கூட்டணியில் இருந்துகொண்டே வைகோ, “தவெக ஒரு முக்கிய சக்தி” என்றும், “ஆச்சரியம் ஏற்படுத்தும்” என்றும் கூறியுள்ளது, திமுக கூட்டணியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முடிவு என்ன?
வைகோவின் இந்த அதிரடி பேச்சு, தவெகவின் அரசியல் வருகை குறித்த விவாதங்களை மேலும் சூடாக்கியுள்ளது. கருத்துக்கணிப்புகள் நிஜமாகுமா அல்லது வைகோவின் கணிப்பு வெல்லுமா என்பதைத் தீர்மானிக்க மே 4-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.
