பெண்கள் மனதைக் கொள்ளை கொண்ட ஒரு கனவு நாயகன். ரஜினி-மம்முட்டிக்கு ஈடாக கலெக்டராக நடித்து ‘தளபதி’, ‘ரோஜா’, ‘பாம்பே’ என எல்லாம் ஹிட்டு. பெண்களின் ‘கனவு மாப்பிள்ளை’ என்று அழைக்கப்படும் அளவுக்கு ரசிகைகளை கொண்டிருந்தவர் அரவிந்த் சாமி. ஆனால், 2005இல் ஏற்பட்ட ஒரு விபத்து அவர் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியது. சினிமா கனவுகள் மங்கி, இரண்டு ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்த அந்த நொடி, எல்லாரும் அவர் சினிமா பயணம் முடிந்துவிட்டதாக நினைத்தனர்.
ஆனால், அவர் ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டு வந்தார்!
அவர் முதலில் கவனம் செலுத்தியது படிப்பை அடிப்படையாகக் கொண்ட தொழில். ProLease Indiaவில் தொடங்கி, 2005இல் சொந்தமாக Talent Maximus என்ற நிறுவனத்தை நிறுவினார். அந்த நிறுவனம் 2022இல் ₹3300 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சாம்ராஜ்யமாக உருவெடுத்தது. ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த தொழில்முனைவோர் என்பதையும் நிரூபித்து காட்டினார்.
தொழிலை ஒரு நிலைக்கு கொண்டு வந்து, பின்னர் சினிமாவில் மீண்டும் நடிக்க தொடங்கினார். மணிரத்னத்தின் ‘கடல்’ படம் மூலம் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கினார். பின்னர் ‘தனிஒருவன்’ படத்தில் வில்லனாக ஜொலித்து, சினிமா ரசிகர்களை மீண்டும் பிரமிக்க வைத்தார். சமீபத்தில் ‘மெய்யழகன்’ படத்தில் கார்த்தி உடன் தோன்றி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். விபத்தால் நடக்கவே முடியாமல் இருந்த அந்த அரவிந்த்சாமியா இது என அனைவரையும் வியக்க வைத்தார்.
எத்தனை தோல்வி வந்தாலும், வாழ்க்கை நம்மைப் புரட்டிப் போட்டாலும், அதில் இருந்து மீண்டு பெரிய அளவில் வளர முடியும் என்பதற்கு அரவிந்த்சாமி ஒரு சிறந்த உதாரணம்.
