(வட அரைக்கோளம் மற்றும் தென் அரைக்கோளத்தின் காற்றுகள் ஒன்று சேரும் பகுதியான) அந்தர் அயன மண்டல ஒடுங்கல் வலயம் நாட்டின் வானிலையை பாதிக்கிறது என்று வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, நாளை மறுதினம் (06)க்குப் பின்னர் தீவு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (05) பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை நிலையம் கூறியுள்ளது.
மேல், சபரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் மேகமூட்டமான நிலை காணப்படும். இந்தப் பகுதிகளில் காலையில் மழை எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சபரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு (30-40) கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அது மேலும் குறிப்பிட்டுள்ளது.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய சேதங்களை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
