தமிழக அரசியல் களம் தேர்தல் தோல்விக்குப் பிந்தைய அதிரடி மாற்றங்களைக் கண்டு வரும் நிலையில், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி கிறிஸ்டோபர் திலக், மிக முக்கியமான அரசியல் உண்மைகளை உடைத்துப் பேசியுள்ளார். குறிப்பாக, நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தது மற்றும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ரஜினியின் ‘சீன்’ கிரியேட் அரசியல்:
தேர்தல் தோல்வியால் கலங்கிப் போய் இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்துக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்த கிறிஸ்டோபர் திலக், “தற்போதைய இக்கட்டான அரசியல் சூழலில், ஏதோ ஒரு புதிய ‘சீன் கிரியேட்’ (Scene Create) செய்ய வேண்டும் என்பதற்காகவே ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துப் பேசியுள்ளார்,” எனக் கிண்டலடித்தார்.
“வெற்றி பெறும் நேரத்தில் மட்டுமல்ல, இக்கட்டான சூழலிலும் நான் உங்களுடன் இருப்பேன்” என ரஜினி ஸ்டாலினிடம் கூறியதாகத் தகவல்கள் வந்தாலும், ரஜினியின் இந்த நடவடிக்கை வெறும் அரசியல் நாடகம் மட்டுமே என்பதை எம்பியின் பேச்சு அம்பலப்படுத்தியுள்ளது.
விஜய் – ஊழலற்ற அரசியலின் புதிய முகம்:
திமுக-வுக்கு மாற்றாகத் தமிழக மக்கள் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை ஏன் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கான காரணத்தையும் எம்பி தெளிவாக விளக்கினார். விஜய்யின் தவெக-வை காங்கிரஸ் ஆதரிக்கிறது என்பதை உறுதிப்படுத்திய அவர், விஜய்யின் நேர்மையான அரசியலைப் வெகுவாகப் பாராட்டினார்.
“விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ளவர்கள் மற்ற கட்சிகளைப் போலப் பெரும் பணம் செலவு செய்து தேர்தலில் போட்டியிடவில்லை. அதனால் அந்தப் பணத்தை மீண்டும் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வராது. இது ஊழலற்ற அரசியலுக்கு வழிவகுக்கும்,” என்று கிறிஸ்டோபர் திலக் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். விஜய்யின் இந்தத் தூய்மையான அணுகுமுறை தான், அவரைத் தமிழகத்தின் அடுத்தக்கட்ட நம்பிக்கையாக மாற்றியுள்ளது.
திமுக-வின் ‘தயவு’ அரசியல் உடைபட்டது:
திமுக கடந்த காலங்களில் பெற்ற வெற்றிகள் அனைத்தும் அதன் சொந்த பலத்தால் வந்தது அல்ல, கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் என்பதை கிறிஸ்டோபர் திலக் நினைவூட்டினார். உதயநிதி ஸ்டாலின் கூட காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் மூலமே வெற்றி பெற்றார் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், திமுக தலைவர்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது என்றார்.
பாஜக தமிழகத்தில் கால் ஊன்றிவிடக் கூடாது என்ற மக்களின் கொள்கைக்கு மதிப்பளித்து, ஊழலற்ற, நேர்மையான அரசியலை முன்வைக்கும் விஜய்யே தமிழகத்தின் சரியான தேர்வு என்பதை காங்கிரஸ் எம்பியின் இந்தப் பேட்டி உறுதிப்படுத்தியுள்ளது.
