உலகளாவிய போர் பதற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் ஒரு எதிர்பாராத கோரிக்கையை முன்வைத்துள்ளார். அடுத்த ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே அந்த அதிரடி வேண்டுகோள். குறிப்பாக திருமணங்களுக்காக தங்கம் வாங்குவதை தள்ளிப்போடுமாறு அவர் கேட்டுக்கொண்டதன் பின்னணியில் ஒரு மாபெரும் பொருளாதாரக் காரணம் மறைந்துள்ளது.
அந்நியச் செலாவணி நெருக்கடி (Forex Outflow) சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலரைத் தாண்டிச் சென்றுள்ளது. இதனால் இந்தியப் பொருளாதாரம் பெரும் அழுத்தத்தைச் சந்தித்து வருகிறது. இந்தியா தனது தேவைக்கான கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தை அதிகளவில் இறக்குமதி செய்கிறது. இதற்கான கட்டணங்களை டாலரில்தான் செலுத்த வேண்டியுள்ளது. உலகம் ஒரு இக்கட்டான சூழலில் இருக்கும் இந்த நேரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பெருமளவில் நாட்டை விட்டு வெளியேறுவது மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலை உருவாக்கும்.
முடக்கப்பட்ட முதலீடாகும் தங்கம் இந்தியா ஆண்டுதோறும் சுமார் 700 முதல் 800 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. பெட்ரோல், டீசலுக்கு அடுத்தபடியாக அதிக அளவிலான அந்நியச் செலாவணி தங்கத்திற்காகவே செலவிடப்படுகிறது. எரிபொருட்கள் பொருளாதாரத்திற்கு நேரடியாகப் பங்களிக்கின்றன. ஆனால், தங்கம் வாங்குவது பொருளாதார ஓட்டத்தில் இருந்து முடக்கப்பட்ட ஒரு முதலீடாகவே பார்க்கப்படுகிறது. கோடிக்கணக்கான ரூபாய் இந்தியாவை விட்டு வெளியேறுவது, தற்போதைய நெருக்கடியான சூழலில் நாட்டின் நிதி நிலையை மேலும் பலவீனப்படுத்தும்.
ரூபாயின் மதிப்பைக் காக்கும் நடவடிக்கை தங்கம் இறக்குமதி மட்டுமல்லாமல், வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களைத் தவிர்த்து உள்நாட்டுச் சுற்றுலாவுக்கு முன்னுரிமை அளிக்குமாறும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் ஆண்டுக்கு 25 பில்லியன் டாலர் அளவிலான பணம் வெளியேறுவது தடுக்கப்படும். ஒட்டுமொத்தமாக, உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இந்திய ரூபாயின் மதிப்பைக் காப்பாற்றவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவுமே இந்தச் சிக்கன நடவடிக்கைகளை அரசு முன்மொழிந்துள்ளது.
