மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது தொடர்பான கவலைகள் எழுந்ததை அடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று (10) அதிகாரிகள் மற்றும் மணல் வர்த்தக உரிமையாளர்களுக்கு இடையே நடைபெற்ற சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுத்தல், மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல் மற்றும் மணல் விலைகளைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான சிறப்பு கலந்துரையாடலை அடுத்தே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான உப்பாலி சமரசிங்க, எதிர்காலத்தில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் புதிய சட்டக் கட்டமைப்பின் கீழ் வழங்கப்படும் என்றார்.
கலந்துரையாடலின் போது மணல் வர்த்தக உரிமையாளர்கள் தங்களது கவலைகள், முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கு மூன்று கியூப் மணலை 50,000 ரூபாவிற்கும், அரச கட்டுமானத் திட்டங்களுக்கு மூன்று கியூப் மணலை 65,000 ரூபாவிற்கும் வழங்குமாறும், ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 350 ரூபா கட்டண அதிகரிப்பை அனுமதிக்குமாறும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றார்.
“மேலும், அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது தொடர்பாக சில சட்ட விடயங்கள் புதிதாக வரைவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்டச் செயலாளரின் இறுதி முடிவு மற்றும் மேற்பார்வையின் கீழ் அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான புதிய விதிமுறைகள் தயாரிக்கப்படும் என அமைச்சர் மற்றும் புவியியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளனர்,” என்றார்.
திருத்தப்பட்ட செயல்முறை மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்குமுறையைக் கொண்டுவரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
