சென்னை:
ஆர்ஜே பாலாஜி இயக்கி, சூர்யா, த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘கருப்பு’. இந்தப்படம் சட்டமும் ஊழலும் நிறைந்த இன்றைய அரசியல் மற்றும் சமூகச் சூழலை ஒரு புதிய கோணத்தில் அணுகி, சாமானிய மக்களின் ஆதங்கத்தை ஆழமாகப் பதிவு செய்துள்ளது.
ரேட்டிங்: 4.0 / 5
மாஸ் ஆரவாரமும், சூர்யாவின் நடிப்பு:
இந்தப்படம் சூர்யாவிற்கும் அவரது ரசிகர்களுக்கும் ஒரு பிரம்மாண்டமான ஆரவாரத்தையும், கூஸ்பம்ப்ஸையும் அளித்துள்ளது. கங்குவா திரைப்படத்தில் இதுபோன்ற ஒரு பிரம்மாண்டமான ஆரவாரம் சூர்யாவிற்கு கிடைத்திருந்தால், அந்தப் படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் பாகுபலியாக மாறியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கருப்பு படம், மூக்குத்தி அம்மன் வரிசையில் ஆர்ஜே பாலாஜிக்கு இன்னொரு பட்டாசுப் படமாக மாறியுள்ளது. கருப்புப் படத்திலுள்ள காந்தாரா போர்ஷன் போல வரும் கருப்பசாமியின் பேய் கருப்புக் காட்சியில் சூர்யாவின் நடிப்பு மிரட்டலாக உள்ளது. விஜய்யின் லியோ சர்ப்ரைஸ் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.
பேபி கண்ணன் – பக்கா வில்லனாக ஆர்ஜே பாலாஜி:
இந்தப்படத்தில் பேபி கண்ணன் என்கிற கதாபாத்திரத்தில் பக்கா வில்லனாகவும் ஆர்ஜே பாலாஜி மிரட்டியுள்ளார். அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தைப் படித்த வழக்கறிஞர்கள் நீதிமான்களாக மாறிய நிலையில் கூட, ஊழலுக்குத் துணை போவதால் தான் நாட்டில் நிலுவையில் இத்தனை கோடி வழக்குகள் உள்ளது என்றும், தப்பு செய்யும் ஊழல்வாதிகள் தப்பித்து சாமானிய மக்கள் தினமும் போலீஸ் ஸ்டேஷன் படியும் கோர்ட் படியும் ஏறி இறங்கி ஆயுள் முழுவதும் நீதிமன்றத்துக்குச் செல்லும் தண்டனையை அனுபவிக்கின்றனர் என்கிற ஆதங்கத்தை கையில் எடுத்து, கூடவே கருப்பனைத் துணைக்கு வைத்துக் கொண்டு ஆர்ஜே பாலாஜி தனது பேனாவால் சாட்டையை சுழற்றியுள்ளார்.
பிளஸ் பாயிண்டுகள்:
படத்திற்கு மிகப்பெரிய தூணாக சாய அபயங்கர் மாறியுள்ளார். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அவரது பிஜிஎம் மற்றும் பாடல்கள் தியேட்டரில் ரசிகர்களை சாமியாட வைக்கிறது. சூர்யா கருப்பசாமியாக வரும் காட்சிகளில் எல்லாம் தியேட்டர் பக்கா பிளாஸ்ட் ஆகிறது. வழக்கறிஞராக த்ரிஷா வரும் இடங்களில் அழகாகத் தெரிகிறார், அதே சமயம் அவருக்கான ஸ்பேஸ் சரியாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்திரன்ஸ் வழக்கை தொடர்ந்து ஷிவதாவின் வழக்கு என ஏகப்பட்ட வழக்குகளும் மக்களைக் கவரும் விதத்தில் உருவாக்கப்பட்ட கதைக்களம் என படம் தெறிக்கிறது. கிளைமேக்ஸ் நெருங்க நெருங்க பல சர்ப்ரைஸ் கேமியோக்களையும் படத்தில் வைத்து கடைசி கிளைமேக்ஸ் சீன் வரை ரசிகர்களை கைதட்டவும், விசில் அடித்து கத்தவும் வைத்துவிட்டார் ஆர்ஜே பாலாஜி.
மைனஸ் பாயிண்டுகள்:
சில விமர்சகர்கள் படத்திற்கு லாஜிக்கே இல்லை என்று விமர்சனம் செய்யலாம். மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு போலி சாமியாரை திருவிளையாடல் பாணியில் அம்மன் வந்து ஆர்ஜே பாலாஜியை வைத்து எப்படி திருவிளையாடல் ஆடினாரோ அதே பாணி கதையாகவே கருப்பு படத்தின் கதையை கருப்பசாமியின் திருவிளையாடலாக நடத்தியுள்ளார். சிலருக்கு முதல் பாதியில் இருந்த அளவுக்கு இரண்டாவது பாதியில் ஆரம்ப காட்சிகள் தொய்வாக உள்ளது என்றும் நினைக்கத் தூண்டும்.
முடிவுரை:
ஆனால், ஆர்ஜே பாலாஜி தனது எழுத்தாலும், மேக்கிங்காலும் படத்தை பிளாக்பஸ்டர் ஆக்கிவிட்டார். கண்டிப்பாக கருப்பு தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் தான். சிபாரிசு செய்யப்படுகிறது.
