விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி இப்போதுதான் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதற்குக் காரணம், நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக மாஸாக நுழைந்த TTF வாசன்தான். வந்த முதல் நாளே வீட்டை இரண்டாக்கி, ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் வாசன்.
காமன் மேன் (Common Man) போட்டியாளராக உள்ளே நுழைந்த ஜேசன், ஆரம்பம் முதலே தன்னை சினிமாவில் வரும் ‘ரகுவரன்’ ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு எல்லாரிடமும் திமிராகவே நடந்துகொண்டு வருகிறார். எதற்கெடுத்தாலும் மற்றவர்களை எதிர்த்துப் பேசுவதையே வாடிக்கையாகக் கொண்ட ஜேசனின் கொட்டத்தை அடக்க பிக் பாஸ் வீட்டிற்குள் ஆளில்லையே என ரசிகர்கள் நினைத்திருந்த வேளையில், வாசனின் என்ட்ரி சரியான பதிலடியாக அமைந்துள்ளது.
இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், தனது படுக்கைக்கு அருகில் மற்றவர்கள் செருப்பை அடுக்கி வைத்திருந்ததைப் பார்த்து ஜேசன் ஆவேசப்படுகிறார். “இனி யாருடைய செருப்பாவது இந்த இடத்துக்கு வந்துச்சுன்னா, செருப்பு வெளியில பறந்துடும்” என அவர் ஏகவசனத்தில் மிரட்ட, அன்ஷிதா மற்றும் தன்யா ஆகியோர் கடும் கோபமடைந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். “நாங்க எல்லாரும் விளையாடிட்டு இருக்கிறோம், அதுக்காக எப்படி இப்படி நீ சொல்லலாம்?” என மற்றவர்கள் ரவுண்டு கட்டியும் ஜேசன் தன் திமிரான பேச்சை நிறுத்தவில்லை.
ஆரம்பத்தில் இந்த விவகாரத்தில் மிகவும் நிதானமாகவே பேசிக்கொண்டிருந்த TTF வாசன், ஒரு கட்டத்தில் ஜேசனின் ஓவர் ஆட்டிட்யூட்டைத் தாங்க முடியாமல் களத்தில் இறங்கினார். வார்த்தைப் போர் முற்றி, அது கைகலப்பாக மாறும் அளவுக்கு நிலைமை கைமீறிப் போனது. வாசனை சிலரும், ஜேசனை சிலரும் கட்டிப்பிடித்துத் தடுக்கும் பரபரப்பான காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்று இணையத்தை அதிரவைத்துள்ளன.
வெளியே இருந்தவரை TTF வாசனுக்குப் பிரச்சனை மேல் பிரச்சனை, கேஸ் மேல் கேஸ் என வந்துகொண்டிருந்தது. இப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளிலேயே ஒரு புது ‘கேஸ்’ வாங்கப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த முறை வாசனுக்கு உள்ளேயும் வெளியேயும் சப்போர்ட் குவிந்து வருகிறது! காரணம், ஜேசனின் தேவையற்ற கோபமும், யாரை என்ன சொன்னாலும் ஆப்போசிட்டாகவே பேசும் அவரது குணமும்தான். ஜேசன் மீது பலருக்கும் இருந்த கோபத்தை, வாசன் தனது ஒற்றைச் செய்கையால் தீர்த்து வைத்துள்ளதாகவே ரசிகர்கள் கருதுகின்றனர்.
இந்த கைகலப்பினால் இருவருக்கும், அல்லது வாசனுக்கு ரெட் கார்டு (Red Card) கொடுத்து இன்றே வெளியேற்றப்படுவாரா? அல்லது, இந்த வார இறுதியில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அதிரடி பஞ்சாயத்தில் இந்த விவகாரம் அலசப்படுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எது எப்படியோ, TTF வாசனின் வருகை பிக் பாஸ் வீட்டை அதிரவைத்துள்ளது என்பது மட்டும் நிதர்சனம். இனி பிக் பாஸ் வீடு தினமும் அடிதடியில் அதிருமா? அல்லது சுவாரஸ்யமான கேமாக மாறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!
