அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக நாட்டின் நிதி கல்வியறிவு (Financial Literacy) 35 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக அதிகரித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நிலையத்தில் (CSE) நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நிலையத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலும், நிதி கல்வியறிவை மக்கள் மத்தியில் மேலும் ஊக்குவிக்கும் நோக்கிலும், ‘பங்குச்சந்தை விளையாட்டு’ (Stock Market Game) திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வின் போது பிரதமரின் அனுசரணையில் 40 ஆவது ஆண்டு நிறைவுக்கான விசேட நினைவு உறை மற்றும் தபால் தலை என்பனவும் வெளியிடப்பட்டன.
இந்நிகழ்வில் கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ராஜீவ பண்டாரநாயக்க, இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் (SEC) தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் D.B.P.H. திஸாபண்டார உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
