இலங்கை பாராளுமன்றம் இன்றைய தினம் கூடவுள்ளது. இதற்கமைய, பலரதும் கவனத்தை ஈர்த்துள்ள உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலம் (Inland Revenue Bill) தொடர்பான இரண்டாவது வாசிப்பு விவாதம் இன்று நடைபெறவுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் மற்றும் புதிய வரி திருத்தங்கள் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டமூலம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இச்சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால், 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு இலங்கை பிரஜையும் TIN (Taxpayer Identification Number – வரி செலுத்துவோர் அடையாள எண்) பெறுவது சட்டப்படியாக கட்டாயமாக்கப்படும். அத்துடன், இந்த எண்ணைப் பெற்றுக்கொள்ளத் தவறினால், அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும், பொருளாதார கொடுக்கல் வாங்கல்களிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த வரிச் சட்டமூல விவாதத்தைத் தொடர்ந்து, பிற்பகல் 5:00 மணி முதல் 5:30 மணி வரை எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் நடைபெறும் என பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
