இலங்கை கிரிக்கெட் (SLC) சபையின் புதிய தேர்வுக் குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அதிகாரபூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று (20) இலங்கை கிரிக்கெட் சபை விடுத்த கோரிக்கையினைத் தொடர்ந்து, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே இந்த ஒப்புதலை வழங்கியுள்ளார் என அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுத்துறைச் சட்டத்தின் 39 (1) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் 2025 மே 21 ஆம் திகதியிட்ட 2437/24 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய இந்த நியமனங்கள் சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, புதிதாக நியமிக்கப்பட்ட தேர்வுக் குழு உறுப்பினர்களின் விபரம்:
- கபில விஜேகுணவர்தன – தலைவர்
- அமல் சில்வா – உறுப்பினர்
- பிரண்டன் குருப்பு – உறுப்பினர்
- வருண வரகொட – உறுப்பினர்
- வனேசா டி சில்வா – உறுப்பினர்
இந்தப் புதிய நியமனங்கள் மூலம் இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத் தேர்வுச் செயல்முறைகள் அதிக வெளிப்படைத்தன்மையுடனும் வினைத்திறனுடனும் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக அமைச்சு தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
