களு கங்கை வடிநிலத்தின் தாழ்வான பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
களு கங்கை வடிநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இதுவரை கணிசமான அளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய மழைவீழ்ச்சி மற்றும் களு கங்கையில் உள்ள நீரியல் நிலையங்களில் பதிவாகியுள்ள நதி நீர் மட்டங்களின் அடிப்படையில், களு கங்கை பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக இங்கிரிய, ஹொரணை, தொட்டங்கொட, மில்லனிய, களுத்துறை, புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் இந்த வீதிகளில் பயணிக்கும் வாகனச் சாரதிகள் மிகவும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
