அஸ்வினி திவாரி இயக்கத்தில் ஜோதிகா, சோனாக்ஷி சின்ஹா, அஷுதோஷ் கோவாரிகர் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிஸ்டம்’ திரைப்படம், மே 22ஆம் திகதி பிரைம் ஓடிடி (OTT) தளத்தில் வெளியானது. இதில் ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே போன்ற பல முக்கிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளன.
தற்போதைய தமிழ் சினிமா சூழலில், நடிகர் சூர்யா நடித்துள்ள “கருப்பு” திரைப்படமும், ஜோதிகா நடித்துள்ள “சிஸ்டம்” திரைப்படமும் சமூக வலைத்தளங்களில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளன. ஒருபுறம் “கருப்பு” திரைப்படத்தில் சூர்யா ஏற்று நடித்துள்ள கருப்பசாமி கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திரையரங்குகளில் அந்தப் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமான ஆதரவு கிடைத்து வருகிறது.
மறுபுறம், ‘சிஸ்டம்’ படத்தில் ஜோதிகா ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் மாறுபட்ட விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. திருமணத்தை மீறிய உறவு குறித்த ஒரு குறிப்பிட்ட விவாதக் காட்சியில் ஜோதிகா நடித்துள்ளார். இந்தக் காட்சி தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சூர்யாவின் பக்திபூர்வமான கதாபாத்திரத்தைக் கொண்டாடும் சில ரசிகர்கள், ஜோதிகா ஏன் இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தார் என சமூக வலைத்தளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதேசமயம், ஜோதிகாவிற்கு ஆதரவாகவும் பல குரல்கள் எழுந்துள்ளன. “சினிமா என்பது ஒரு கலைவடிவம்; ஒரு நடிகையாக ஜோதிகா எந்த வகையான கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும். ஒரு திரைக்கதையின் தேவையை வைத்து ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையோ அல்லது குடும்பத்தையோ விமர்சிப்பது முற்றிலும் தவறானது” என பல திரையுலக ரசிகர்களும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். எவ்வாறாயினும், அடுத்த சில நாட்களுக்கு இணையத்தில் ‘சிஸ்டம்’ படமும் ஜோதிகாவின் கதாபாத்திரமும் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
