ஹட்டன் – டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேகநபர், எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று ஹட்டன் மாவட்ட நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
டிக்கோயா பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் கடந்த வியாழக்கிழமை (21) 85 வயதுடைய எஸ். காளிமுத்து சத்திவேல் மற்றும் 82 வயதுடைய அவரது மனைவி சகுந்தலாதேவி ஆகியோர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளின் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இதனடிப்படையில், பொதுமக்களிடமிருந்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பதுளை – ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த இவர், கொழும்பில் பணிப்பெண்ணாகப் பணியாற்றும் பெண்ணொருவருடன் தொடர்பு பேணி வந்த நிலையில், அப்பெண்ணின் சகோதரர் வீட்டிலேயே தஞ்சமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பி, கூரிய ஆயுதம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து தங்க நகைகளும் ஹட்டன் பொலிஸாரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளன. இக்கொலைச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
