ஆசிரியர் நியமனங்கள் தொடர்பாக நிலவி வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து, பிரதமர் மற்றும் உயர்கல்வி, தொழற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும், கல்விப் பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நாளை (26) நடைபெறவுள்ளது.
அரசுப் பல்கலைக்கழகங்களின் 2018/19 மற்றும் 2019/20 கல்வி ஆண்டுகளைச் சேர்ந்த பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் சிக்கல்கள் குறித்தே இந்த விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பின்படி, கல்விப் பட்டதாரிகள் பொது நேர்முகத் தேர்வு மற்றும் நடைமுறை மதிப்பீட்டின் மூலம் ஆசிரியர் சேவையின் தரம் 2.2 இற்கு நியமிக்கப்பட வேண்டும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், தமக்கான நியமனங்கள் இதுவரை வழங்கப்படவில்லை எனவும், இதற்கான முறையான தீர்வு இன்னும் எட்டப்படவில்லை எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் கடந்த பிப்ரவரி 10ஆம் திகதி பிரதமர் ஹரினி அமரசூரியவுடன் இது குறித்து கலந்துரையாடப்பட்டதாக சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, மார்ச் 3ஆம் திகதி வெளியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின்படி, தற்போது நடைமுறையிலுள்ள ஆசிரியர் நியமனத் திட்டத்துடன் இவர்களையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இது தொடர்பான அமைச்சரவை முடிவு குறித்து பிரதமரின் அலுவலகம் மாகாண சபைகளுக்கு அறிவித்துள்ள போதிலும், அந்த அறிவித்தலில் தமக்கான குறிப்பிட்ட ஒதுக்கீடுகள் (Quota) எவையும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என மாகாண சபைகள் தெரிவித்துள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், தற்போது திட்டமிடப்பட்டுள்ள 23,000 ஆசிரியர்களுக்கான நியமனத் திட்டத்திற்குள் கல்விப் பட்டதாரிகளைச் சேர்க்க முடியாது என மாகாண சபைகள் கூறியுள்ளதாகவும் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
