Headlines

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு; மூவரைக் காணவில்லை

ஹொரணை – அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட கொடூரத் தீ விபத்தில் சிக்கி 11 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், மேலும் மூவர் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 7 பேர் சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (03) மாலை இடம்பெற்ற இந்த விபத்தின்போது, குறித்த காப்பகத்தில் மொத்தம் 72 முதியவர்கள் தங்கியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ பரவியதையடுத்து பொலிஸார், தீயணைப்புப் படையினர், மீட்புப் குழுவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து முன்னெடுத்த தீவிர மீட்பு நடவடிக்கையின் மூலம் 44 பேர் எவ்விதக் காயங்களுமின்றிப் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

காப்பகத்தின் ஒரு பகுதியில் வேகமாகப் பரவிய தீ, நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்தின் பின்னர் ஆரம்பத்தில் 11 பேர் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்திருந்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது பல சடலங்கள் மீட்கப்பட்டன. தேடுதல் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ எவ்வாறு உருவானது மற்றும் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டதா என்பது குறித்துத் தடயவியல் நிபுணர்கள் மற்றும் பொலிஸ் விசாரணைக் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று காலை நடத்தப்பட உள்ளன. அத்துடன், உயிரிழந்தவர்களின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை அவர்களின் விபரங்களை உறுதிப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், தீ விபத்தினால் இடம்பெயர்ந்த 51 முதியவர்களுக்குப் பட்டகொட ஆரம்பப் பாடசாலையில் தற்காலிகத் தங்குமிட வசதிகள் மற்றும் நிவாரணங்களை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *