Headlines

ஜூலையில் எரிபொருள் இறக்குமதிச் செலவு 198 மில்லியன் டொலராகக் குறையும் – சிபிசி தலைவர்

ஏப்ரல் மாதத்தில் அதிகளவான எரிபொருள் கப்பல்கள் கொள்வனவு செய்யப்பட்டமையினால், மே மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) 520 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட வேண்டியேற்பட்டதாக அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா இன்று தெரிவித்தார். எனினும், ஜூலை மாதத்தில் இந்த எரிபொருள் இறக்குமதிச் செலவு 198 மில்லியன் டொலராகக் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வழமையாக ஒரு மாதத்திற்கு இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் உட்பட ஐந்து எரிபொருள் கப்பல்களே கொள்வனவு செய்யப்படும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் பதினொரு எரிபொருள் கப்பல்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சுத்திகரிப்பு நிலையத்திற்குத் தேவையான கச்சா எண்ணெய் கிடைக்காமை மற்றும் மின்சார உற்பத்திக்கு மேலதிக டீசல் இருப்புக்கள் தேவைப்பட்டமை காரணமாகவே ஏப்ரல் மாதத்தில் அதிகளவான கப்பல்களை கொள்வனவு செய்ய வேண்டியேற்பட்டதாகத் தலைவர் விளக்கமளித்தார்.

“ஏப்ரல் மாதத்தில் ஒரு டீசல் கப்பல் முழுமையாக மின்சார உற்பத்திப் பயன்பாட்டிற்காக எடுக்கப்பட்டது. கடும் வெப்பம் காரணமாக ஏப்ரலில் இரவு நேர மின்சாரத் தேவை அதிகமாக இருந்ததுடன், வறட்சி நிலைமையால் நீர்மின் உற்பத்தியும் குறைவாக இருந்தது. இதனால் மின்சார உற்பத்திக்கு மேலதிக டீசல் இருப்புக்கள் தேவைப்பட்டன,” என்று அவர் கூறினார்.

எரிபொருள் இறக்குமதிச் செலவு மே மாதத்தில் காணப்பட்ட 512 மில்லியன் டொலரிலிருந்து ஜூன் மாதத்தில் 318 மில்லியன் டொலராகக் குறைந்துள்ளது என்றும், ஜூலையில் அது மேலும் 198 மில்லியன் டொலராகக் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் இறக்குமதிச் செலவு குறைவடைவதனால், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பிழப்பில் ஏற்படும் தாக்கம் குறையும் என்றும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *