Headlines

2027 இல் முன்பள்ளிகளுக்குப் புதிய பொதுவான பாடத்திட்டம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

ஒரு குழந்தையின் எதிர்காலக் கல்விப் பயணத்தை வடிவமைப்பதில் முன்பள்ளிப் பருவம் மிக முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது எனவும், ஆரம்பப் பிள்ளைப்பருவக் கல்வியின் (Early Childhood Education) தரத்தை உறுதிசெய்வதற்கு அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அனைத்து மாகாணங்களிலும் முன்னெடுக்கப்படும் ஆரம்பப் பிள்ளைப்பருவக் கல்வித் திட்டங்களை முறையாகக் கண்காணித்து நெறிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

குருநாகல் மாவட்டத்திற்கான தனது கல்வி கண்காணிப்பு விஜயத்தின் ஒரு பகுதியாக, குருநாகல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று (05) நடைபெற்ற வடமேல் மாகாண முன்பள்ளி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் 2023/2024 டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். ஆரம்பப் பிள்ளைப்பருவக் கல்வி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வடமேல் மாகாண சபை ஆகியவை இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

கல்வியில் ஸ்திரத்தன்மை மற்றும் புதிய கொள்கைகள்

இந்நிகழ்வில் டிப்ளோமா பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி வைத்துத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்:

“எதிர்வரும் சில ஆண்டுகளில் ஆரம்பப் பிள்ளைப்பருவக் கல்வியில் ஒரு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதனை அடைவதற்காக, தேசிய கல்வி ஆணைக்குழு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து புதிய கொள்கைகள், ஆசிரியர் பயிற்சிக்கான தரநிலைகள் மற்றும் முறையான கண்காணிப்பு பொறிமுறைகளை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்த ஆண்டு முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம். இதன் மூலம் 2027 ஆம் ஆண்டளவில் நாடு முழுவதும் உள்ள முன்பள்ளிகளுக்கு பொதுவான பாடத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கின்றோம். முன்பள்ளிக் கல்வியின் நோக்கத்தையும் அதன் மதிப்பையும் சமூகம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.”

குழந்தைகளின் மீதான சுமையைக் குறைத்தல்

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “முன்பள்ளிக் கல்வியின் முதன்மை நோக்கம் பிள்ளைகளை அவர்களின் எதிர்கால ஆரம்பக் கல்விக்குத் தயார்படுத்துவதாகும். எனவே, அவர்களின் வயதிற்கு ஏற்ற திறன்களையும் ஆற்றல்களையும் வளர்ப்பதில் முன்பள்ளிகள் கவனம் செலுத்த வேண்டும்.

பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களாகிய நாம், குழந்தைகளின் மீது தேவையற்ற சுமைகளை ஏற்றாமல், அவர்களின் வயதிற்கு ஏற்றவாறு சமூகத் திறன்களையும் அறிவையும் வளர்த்துக்கொள்வதற்கான பாதையை உறுதிசெய்ய வேண்டும். ஆரம்பப் பிள்ளைப்பருவக் கல்வியிலிருந்து நாம் உண்மையாக என்ன எதிர்பார்க்கிறோம் என்பதைச் சமூகத்திற்குக் கொண்டு செல்வதில் முன்பள்ளி ஆசிரியர்களான உங்களுக்குப் பெரும் பங்கு உண்டு” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *