இலங்கை மீது அமெரிக்கா விதிப்பதற்கு முன்மொழிந்துள்ள கூடுதல் வரி விதிப்புத் தொடர்பாக, கட்டாய உழைப்பு (Forced labour) விவகாரங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு வருவதாக பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த நேற்று தெரிவித்துள்ளார். விநியோகச் சங்கிலியில் கட்டாய உழைப்பு பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், இந்த முன்மொழியப்பட்ட வரியை நீக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஆராய்வதற்காக வர்த்தக அமைச்சின் செயலாளரின் தலைமையில் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு விசேட குழு நியமிக்கப்பட்டதாகவும், இதுவரையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் கூறினார். மேலும், “இது தொடர்பாக அடுத்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் மேலும் இரண்டு கட்ட கலந்துரையாடல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்தார்.
விநியோகச் சங்கிலியில் கட்டாய உழைப்பு பயன்படுத்தப்படும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களை இலங்கை பயன்படுத்துவதாக அமெரிக்க அதிகாரிகள் தங்களின் ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாகவே இலங்கை மீது 12.5 சதவீத கூடுதல் வரி விதிக்க அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டது.
எனினும், இலங்கை கட்டாய உழைப்பு முறைக்கு முற்றிலும் எதிரானது என்று சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், விநியோகச் சங்கிலியில் கட்டாய உழைப்பு இல்லை என்பதை உறுதி செய்வதற்காக சட்டங்கள் திருத்தப்படும் என்றும், அதன் பின்னர் இந்த கூடுதல் வரிகள் நீக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். அத்துடன், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி (USTR) அலுவலகத்துடன் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் வர்த்தக இடைவெளி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் இறுதி உடன்பாடு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
