இலங்கை முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்புகளை உறுதி செய்யும் கல்வி முறையை உருவாக்குவதில், தரவுகளை அடிப்படையாகக் கொண்ட தீர்மானம் எடுத்தலின் முக்கியத்துவத்தை பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய கல்வி முகாமைத்துவத் தகவல் அமைப்பின் (NEMIS) மனிதவளத் தொகுதியின் முதலாம் கட்டம் மற்றும் ‘இ-தக்ஸலாவ’ கற்றல் முகாமைத்துவ அமைப்பின் (LMS) முன்னோடித் திட்டம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
கல்வியின் தரத்தை நாடு முழுவதும் மேம்படுத்துவதற்கு துல்லியமான தரவுகள், பயனுள்ள கொள்கைகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு ஆகியவை அத்தியாவசியமானவை என்று பிரதமர் குறிப்பிட்டார்.
கல்வித் துறையில் மனிதவள முகாமைத்துவம் மற்றும் நிர்வாக செயல்திறனை மேம்படுத்துவதற்காக NEMIS தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மாகாண கல்வி அதிகாரிகள் தனித்தனி தகவல் அமைப்புகளை இயக்கி வந்த போதிலும், புதிய தளம் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளின் தரவுகளை ஒரே வலையமைப்பில் ஒருங்கிணைக்கும்.
இத்திட்டத்தின் முதலாம் கட்டம் சபரகமுவ, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் ஆசிரியர் இடமாற்றங்களை எளிதாக்கும். இந்த அமைப்பை தீவு முழுவதும் விரிவுபடுத்தவும், எதிர்காலக் கட்டங்களில் அனைத்து கல்விப் பணியாளர்களையும் இதில் உள்ளடக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தத் தளம் ஆசிரியர் ஆட்சேர்ப்பு, இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிப்படையான மற்றும் செயல்திறன் மிக்க பொதுச் சேவைகளை வழங்குவதில் டிஜிட்டல் மயமாக்கல் ஒரு முக்கிய அங்கம் என்று பிரதமர் அமரசூரிய சிறப்பித்துக் காட்டினார். எவ்வாறாயினும், தொழில்நுட்பம் ஆசிரியர்களுக்கு மாற்றீடானது அல்ல, மாறாக கல்விச் செயல்பாட்டில் அவர்களின் பங்கை பலப்படுத்துவதற்கும் ஆதரவளிப்பதற்கும் ஆகும் என்று அவர் வலியுறுத்தினார்.
‘இ-தக்ஸலாவ’ கற்றல் முகாமைத்துவ அமைப்பு கற்பித்தல், கற்றல் மற்றும் மாணவர் மதிப்பீட்டை மேம்படுத்துவதோடு, வசதிகள் குறைந்த பாடசாலைகளுக்கு தரமான கல்வி வளங்களுக்கான கூடுதல் அணுகலை வழங்கும் என்றும், விசேட தேவையுடைய குழந்தைகளின் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த முயற்சி பிரதமர் அலுவலகம், கல்வி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, கல்வியில் டிஜிட்டல் மாற்றத்திற்கான பணிக்குழு, மாகாண கல்வி அதிகாரிகள் மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவற்றின் கூட்டு முயற்சிகள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
