Headlines

பல்வேறு விதிமீறல்கள்: நுகேகொடையில் பிரபல உணவு விநியோக நிறுவனத்திற்கு ரூ. 75,000 அபராதம்

நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டதையடுத்து, நுகேகொடையில் உள்ள முன்னணி உணவு விநியோக நிறுவனம் ஒன்றுக்கு 75,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த உணவுப் பொருட்களை அழிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நுகேகொட, பாகொட வீதியில் அமைந்துள்ள ‘அஸ்ரியல் மார்க்கெட்டிங் (தனியார்) நிறுவனம்’ (Asriel Marketing (Pvt) Ltd) எனும் நிறுவனத்தில், கடந்த ஜூன் 4ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த நிறுவனம் காலாவதியான உணவுப் பொருட்களை, காலாவதியாகாத பொருட்களுடன் சேர்த்து சேமித்து வைத்திருந்தமை, இறக்குமதியாளர் அல்லது விநியோகஸ்தர் விபரங்களைக் காட்சிப்படுத்தாமல் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் நுகர்வோரைத் தவறாக வழிநடத்தும் வகையில் செயற்பட்டமை ஆகியவை நீதிமன்ற விசாரணைகளின் போது தெரியவந்தது.

உண்மைகளைக் கருத்திற்கொண்ட நீதிமன்றம், நிறுவனத்திற்கு 75,000 ரூபாய் அபராதம் விதித்ததுடன், இந்த வழக்குடன் தொடர்புடைய உணவுப் பொருட்களை அழிக்குமாறும் உத்தரவிட்டது.

இதேவேளை, உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்னர் லேபிள்கள், உற்பத்தி மற்றும் காலாவதியாகும் திகதிகள், மற்றும் இறக்குமதியாளர் அல்லது விநியோகஸ்தர் விபரங்களை அவதானமாகச் சரிபார்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை நுகர்வோரைக் கேட்டுக்கொண்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான பேக்கேஜிங் அல்லது கட்டாய விபரங்கள் இல்லாத பொருட்களை வாங்குவதைத் தவிர்க்குமாறும் அதிகார சபை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இது போன்ற சட்டவிரோதமான அல்லது ஏமாற்றும் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நுகர்வோர், அலுவலக நேரங்களில் 1977 என்ற ஹாட்லைன் இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்குத் அறியத்தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *