உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகளுக்கு மறைமுகமாக இடையூறு விளைவிக்கும் திட்டமிட்ட முயற்சியில், உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் திலித் ஜயவீர உள்ளிட்ட அரசியல் தொடர்புடைய நபர்கள் ஈடுபட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தற்போது தடுப்புக்காவல் உத்தரவில் உள்ள அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பிரதானி சுரேஷ் சல்லே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேனவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் மோஷன் (motion) ஒன்றின் மூலம் இன்று அறிவித்தது.
வெளிவரும் புதிய பின்னணிகள்
இதன்போது நீதிமன்றத்தில் கருத்து வெளியிட்ட குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், சந்தேக நபரான சுரேஷ் சல்லே விசாரணைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தனர். அத்துடன், அவரது இந்த இடையூறு விளைவிக்கும் செயற்பாடுகளுக்கு உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் திலித் ஜயவீர போன்ற அரசியல் தரப்பினரின் ஆதரவு கிடைத்து வருவதாகவும் சுட்டிக்காட்டினர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய, இதுவரை வெளிவராத அரசியல் தொடர்புகள் அம்பலமாவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தமக்கு நியாயமான சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளது.
