சென்னை:
கடந்த சில மாதங்களாக தென்னிந்தியத் தொழில்துறை வரைபடத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தென்படுகின்றன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருமதி. கீர்த்தனா தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, மாநிலத்தின் தொழில் வளர்ச்சி புதிய உயரங்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சமீபத்திய தரவுகள் திகைப்பூட்டும் ஒரு உண்மையைப் பறைசாற்றுகின்றன. தமிழகத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த பல முக்கியப் பெரும் முதலீடுகள் அண்டை மாநிலமான ஆந்திராவை நோக்கி நகர்ந்துள்ளன.
“ஆந்திராவால் இது எப்படிச் சாத்தியமாகிறது?” என்ற கேள்வி தற்போது தொழில்துறை வட்டாரங்களில் பிரதான பேச்சாக உள்ளது. தமிழகத்தை விட்டு நழுவி, ஆந்திராவுக்குச் சென்ற முக்கியத் திட்டங்களின் பட்டியல் இந்தக் கவலையை உறுதிப்படுத்துகிறது:
- ஹவாசுங் (Hwaseung) நிறுவனம்: தூத்துக்குடியில் ₹1,720 கோடி மதிப்பில் புதிய ஆலை அமைக்க முன்னாள் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இத்திட்டம் தற்போது ஆந்திராவின் குப்பம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
- ராயல் என்பீல்டு (Royal Enfield): தமிழகத்தின் அடையாளமாகத் திகழும் இந்சிறுவனம், தனது வரலாற்றிலேயே முதன்முறையாக மாநிலத்திற்கு வெளியே விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. ஆந்திராவின் தடா (திருப்பதி) பகுதியில் புதிய கிரீன்ஃபீல்டு உற்பத்தி ஆலையையும், வெண்டார் பூங்காவையும் அமைக்க உள்ளது.
- ஹிண்டால்கோ (Hindalco): ஆப்பிள் நிறுவனத்தின் சப்ளை செயினில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய, ₹586 கோடி மதிப்பிலான அலுமினியம் எக்ஸ்ட்ரூஷன் ஆலைத் திட்டமும் ஆந்திராவின் குப்பம் பகுதிக்குச் சென்றுள்ளது.
இவை தவிர, தெலுங்கானாவில் திட்டமிடப்பட்டிருந்த பிரீமியர் எனர்ஜிஸ் (Premier Energies) நிறுவனத்தின் பெரிய சோலார் உற்பத்தித் திட்டமும் ஆந்திராவின் நாயுடுபேட்டைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது அண்டை மாநில முதலீடுகளையும் ஆந்திரா ஈர்ப்பதைக் காட்டுகிறது.
உள்கட்டமைப்பு வசதிகள், எளிதான ஒற்றைச் சாளர அனுமதி முறை, வேகமான நில ஒதுக்கீடு மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த கொள்கைகள் போன்றவை ஆந்திராவின் இந்த வெற்றிக்குக் காரணங்களாக விவாதிக்கப்படுகின்றன.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்குத் தொழில் முதலீடுகள் மிக முக்கியம். அண்டை மாநிலங்களுடன் போட்டியிடும் வகையில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது. இல்லையெனில், தமிழகத்தின் தொழில் வரைபடம் மேலும் பாதிப்புக்கு உள்ளாகும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
