உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், பொலிஸ் மா அதிபர் (IGP), குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) மாதவ குணவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர் என அத தெரண செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மீது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த சூழ்நிலையிலேயே, தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வதைத் தடுக்கும் வகையிலான தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த மனுவானது தற்போதைய அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Tags: #Sri Lanka tamil news, #Sri Lankan Tamil news, #Sri Lankan latest Tamil news, #Lankasri.
