முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் பாதாள உலகத் தலைவன் ‘ஹரக் கட்டா’வுக்குச் சலுகை வழங்குவதற்காகப் பேரம் பேசும் அதிர்ச்சியூட்டும் குரல் பதிவு (Voice Recording) தற்போது சமூக வலைத்தளங்களிலும், சில ஊடகங்களிலும் கசிந்துள்ளது.
இந்தக் குரல் பதிவில், ‘ஹரக் கட்டா’வை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழான தடுப்புக் காவலிலிருந்து விடுவித்து, சாதாரண கைதியைப் போல வேறு ஒரு சிறைச்சாலைக்கு மாற்றுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளுக்கு சுமார் 200 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக வழங்குவதற்கு அவர்கள் பேரம் பேசுவது அந்த உரையாடலில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
குறித்த குரல் பதிவின்படி, இந்த இலஞ்சப் பணத்தை யார் மூலம், எப்படிக் கைமாற்றுவது மற்றும் அதிகாரிகளை எப்படிச் சம்மதிக்க வைப்பது என்பது குறித்த ரகசியத் திட்டங்களை அவர்கள் மிகத் தெளிவாக வகுத்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து (Deshabandu) ஆகியோரின் பெயர்கள் அந்தப் பேரம் பேசும் குரல் பதிவில் அடிபடும் நிலையில்,
.தங்களுக்குள் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்தச் சட்டவிரோத நடவடிக்கையை மிகச் சாதாரணமாக அவர்கள் பேரம் பேசும் விதம் பொதுமக்களையும் அரசியல் வட்டாரங்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தக் குரல் பதிவு கசிந்ததையடுத்து, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைகள் மேலும் தீவிரமடைந்துள்ளதோடு, இந்த பேரத்தில் தொடர்புடைய வேறு சில முக்கியப் புள்ளிகளும் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
