இலங்கையில் புத்த சாசனத்தை நிறுவிய அரஹத் மஹிந்த தேரரின் தர்மப் பணியை நினைவுகூரும் போசன் பௌர்ணமி தினமானது, ஆன்மீக விழிப்புணர்வு, ஞானம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை நினைவூட்டும் ஒரு புனித நாளாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது போசன் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
போசன் என்பது வெறும் மத ரீதியான அனுசரிப்பு மாத்திரமன்றி, முழு தேசத்தினதும் கலாசாரம், தார்மீக வாழ்வியல் மற்றும் சிந்தனை முறையின் மாற்றத்தின் அடையாளமாகும் எனவும், பௌத்த தத்துவமானது பல நூற்றாண்டுகளாக இலங்கையின் தேசிய அடையாளத்தை வடிவமைத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையான வளர்ச்சி என்பது மனித மனதிலிருந்தே தொடங்குகிறது என்பதை வலியுறுத்திய பிரதமர், இரக்கம், பச்சாதாபம், சமத்துவம், ஒழுக்கம் மற்றும் பொறுப்பு ஆகிய உன்னத விழுமியங்களின் அடிப்படையில் அமைதியான, நியாயமான மற்றும் வளமான இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடு இன்று புதிய நம்பிக்கையுடன் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த பயணத்தின் வெற்றியை உறுதி செய்யப் பொருளாதார முன்னேற்றம் மாத்திரம் போதாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையான ஒழுக்கமான மற்றும் வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப, அறநெறி மற்றும் தார்மீக விழுமியங்களில் வேரூன்றிய ஒரு சமூகம் மிகவும் அவசியம் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது செய்தியில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
