Headlines

முன்னாள் அமைச்சர் சஷேந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை: வெளிநாட்டு பயணத் தடை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷேந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக, ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் இந்த குற்றப்பத்திரிகைகள் இன்று சமர்ப்பிக்கப்பட்டதாக ‘அத தெரண’ செய்தியாளர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பிரதிவாதிகள் ஒவ்வொருவரும் தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பிரதிவாதிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்தார்.

அத்துடன், பிரதிவாதிகளின் கைரேகைகளைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்கவும் நீதிபதி மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

வழக்கின் பூர்வாங்க விசாரணைகளை ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடத்த நீதிமன்றம் தீர்மானித்தது.

சஷேந்திர ராஜபக்ஷ தவிர, சேபாலிகா சமன் குமாரி மற்றும் கீர்த்தி பண்டார கொட்டகம ஆகியோரும் இந்த வழக்கில் பிரதிவாதிகளாகக் பெயரிடப்பட்டுள்ளனர்.

CIABOC இன் குற்றச்சாட்டுகளின்படி, பிரதிவாதிகள் ஊழல் புரிந்தமை, அதற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் இழப்பீட்டு அலுவலகத்தின் சில அதிகாரிகளுக்கு எதிராக உத்தியோகபூர்வ செல்வாக்கைப் பயன்படுத்தி 8.85 மில்லியன் ரூபா இழப்பீட்டைப் பெற்றுக் கொடுத்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

2022 மே மாதம் 9 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையின் போது சேதமடைந்த செவனகல, கிரீப்பான்வெவ பிரதேசத்தில் உள்ள இலங்கை மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணியில் அமைந்துள்ள, சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டிடத்தையும் உள்ளடக்கிய சொத்துக்காக வழங்கப்பட்ட இழப்பீடு தொடர்பிலேயே இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குறித்த சொத்துக்கான இழப்பீட்டுக் கோரிக்கை ஏற்கனவே நிராகரிக்கப்பட்டிருந்த போதிலும், இழப்பீடு பெறப்பட்டுள்ளதாக வழக்குத் தரப்பு வாதிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *