முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த போதே அவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:
- தேர்தல் கால போஸ்டர்கள்: 2014 மாகாண சபை தேர்தலுக்கு முன்னதாக, அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்காக 250,000 சுவரொட்டிகளை அச்சிடுமாறு ஜகத் புஷ்பகுமார பணித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்காக வெலவன டிரேடிங் மற்றும் குருணாகல் டிரேடிங் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டதன் மூலம், குறித்த நிறுவனங்களுக்கு 2.665 மில்லியன் ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
- வெள்ள நிவாரணப் பொருட்கள்: 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது, முறையான கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாமல், வெள்ள நிவாரணப் பணிகளுக்காக எனக் கூறி மேற்படி நிறுவனங்களிடமிருந்து 5,000 ரீ-சேர்ட்டுகள் (T-shirts) மற்றும் 5,000 சேலைகளைப் பெற்றுக்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த பொருட்கள் மக்களுக்கு விநியோகிக்கப்படாமல் இருந்ததால், முறையே 3.275 மில்லியன் ரூபாய் மற்றும் 3.075 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
- மே தினக் கூட்டங்கள்: 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மே தினக் கூட்டங்களில் பங்கேற்பாளர்களுக்கு வழங்குவதற்காக மேற்படி நிறுவனங்களிடமிருந்து ரீ-சேர்ட்டுகள் மற்றும் சேலைகளைப் பெற்று விநியோகிப்பதற்காக அதிகாரிகளைப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
