கொழும்பு – ஜூலை 13, 2026
நெல் சந்தைப்படுத்தல் சபை (PMB) 2026 யல பயிர்ச்செய்கை பருவத்திற்கான நெல் கொள்வனவை இன்று (13) முதல் ஆரம்பிக்கவுள்ளது. தற்போது அதிகளவில் அறுவடை கிடைக்கப்பெறும் பகுதிகளில் நெல் கொள்வனவு நிலையங்கள் திறக்கப்பட்டு, கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தற்போது அதிகளவில் நெல் அறுவடை இடம்பெறுவதால், முதற்கட்டமாக அப்பகுதிகளில் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பருவத்திற்கான நெல் கொள்வனவுக்கான உத்தரவாத விலைகளை சபை சமீபத்தில் அறிவித்திருந்தது. இதன்படி, நாடு நெல் ஒரு கிலோகிராம் 120 ரூபாவிற்கும், சம்பா நெல் 130 ரூபாவிற்கும், கீரி சம்பா 140 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
நாடளாவிய ரீதியில் 143 களஞ்சியசாலைகள் மூலம் நெல் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நெல் கொள்வனவுத் திட்டத்திற்காக அரசாங்கம் 6 பில்லியன் ரூபாயை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஒதுக்கியுள்ளது. அத்துடன், மேலதிகமாக 10 பில்லியன் ரூபாய் மேலதிக கடன் வசதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபையின் இந்த நடவடிக்கை, சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களும் நெல் இருப்புக்களை கட்டியெழுப்ப வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல் கொள்வனவு செயல்முறையை விவசாய அபிவிருத்தி திணைக்களம் கண்காணிக்கும்.
