பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, தேசிய முன்பருவச் சிறுவர் அபிவிருத்தி வாரத்தை இன்று (14) முதல் ஜூலை 20, 2026 வரை அனுஷ்டிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
“வளரும் சிறுவர் உலகத்தை நோக்கி – ஒரு கதிரவன், மகிழ்ச்சியான குடும்பம்” என்ற கருப்பொருளின் கீழ் தேசிய முன்பருவச் சிறுவர் அபிவிருத்தி வாரம் அனுஷ்டிக்கப்படும்.
உடல்ரீதியான, உளச்சமூக ரீதியான மற்றும் அறிவுசார்ந்த ரீதியில் நன்கு அபிவிருத்தியடைந்த இலங்கைச் சிறுவர் தலைமுறையை உருவாக்குவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த வாரத்தைக் குறிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு மற்றும் சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகள் பலவற்றை அமைச்சுத் திட்டமிட்டுள்ளதாகப் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
சிறுவர் முன்பருவப் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி குறித்து நன்கு அறிந்த சமூகத்தை உருவாக்குவதற்கும், சிறுவர்களுக்கான தரமான சேவைகளைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கும் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை முற்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சிறுவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்பருவச் சிறுவர் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி வகிக்கும் முக்கிய பங்கு குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த வாரம் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சிறுவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் அன்பான சூழலை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்துப் பெற்றோர்கள் மற்றும் சமூகத்தினருக்குக் கற்பிப்பதில் இந்த முயற்சி குறிப்பாகக் கவனம் செலுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். “விழிப்புடன் இருங்கள், உங்கள் குழந்தையின் நலனுக்காக செயல்படுங்கள்.” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்
