Headlines

400 ரூபா பரிசோதனைக்கு 550 ரூபா அறவீடு: யாழ்ப்பாண தனியார் வைத்தியசாலைக்கு 30 இலட்சம் ரூபா அபராதம்!

மருத்துவப் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட நோயாளிகளிடம் அதிக கட்டணம் அறவிட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் 3 மில்லியன் ரூபா அபராதம் விதித்துள்ளது.

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ பரிசோதனைக் கூடங்களில் முழுமையான இரத்தப் பரிசோதனைக்கு (FBC – Full Blood Count) அதிகபட்சமாக 400 ரூபாவை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை (CAA) நிர்ணயித்திருந்தது.

எனினும், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, யாழ்ப்பாணம் பலாலி வீதி, கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள குறித்த தனியார் நிறுவனம் அதே பரிசோதனைக்கு 550 ரூபாவை அறவிட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த நிறுவனத்திற்கு எதிராக யாழ். நீதவான் நீதிமன்றில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை வழக்குத் தாக்கல் செய்தது. குறித்த நிறுவனம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, நீதிமன்றம் 3 மில்லியன் ரூபா அபராதத்தை விதித்ததுடன், இந்த மோசடி தொடர்பில் நிறுவனத்தின் சொந்தச் செலவில் முன்னணிப் பத்திரிகைகளில் அறிவிப்பொன்றை வெளியிடுமாறும் உத்தரவிட்டது.

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் பரிசோதனைக் கூடங்களில் சேவைகளைப் பெறும்போது அனுமதிக்கப்பட்ட மருத்துவ சேவை கட்டணங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

மேலும், முறைப்பாடுகளைச் செய்யும்போது முக்கிய ஆதாரமாகப் பயன்படும் என்பதால், அனைத்து கொடுப்பனவுகளுக்கும் செல்லுபடியாகும் பற்றுச்சீட்டு அல்லது ரசீதுகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி அதிக கட்டணம் அறவிடுவது தொடர்பான முறைப்பாடுகளை, அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தினூடாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு (CAA) சமர்ப்பிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *