2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமைக்காக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) பூஜித ஜயசுந்தரவுக்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று (31) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
முன் அறிவிப்புகள் கிடைத்திருந்தும் குண்டுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமைக்காக, கடமையைச் செய்யத் தவறியமை, கொலை முயற்சி மற்றும் கொலை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்தே நீதிமன்றம் இந்தத் தண்டனையை விதித்துள்ளது.
போதிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பிலேயே இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீதியரசர்களான பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோர் அடங்கிய கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற ஆயத்தினால் இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இதில், நீதியரசர்களான பிரியந்த லியனகே மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோர் பெரும்பான்மை தீர்ப்பை வழங்கி, சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஜயசுந்தர குற்றவாளி எனத் தீர்ப்பளித்து மரண தண்டனையை விதித்தனர்.
முன்னதாக, 2022 ஆம் ஆண்டில் மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற ஆயம் இந்த இரு பிரதிவாதிகளையும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்திருந்தது. இருப்பினும், சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டினைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில், பிரதிவாதிகளின் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது.
275 பேரின் மரணத்துக்கும், 500 இற்கும் மேற்பட்டோரின் காயங்களுக்கும் காரணமான உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமைக்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் ஐஜிபி பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 855 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்திருந்தார்.
நீண்ட விசாரணையின் பின்னர், 2022 பெப்ரவரி 18 அன்று நீதியரசர்களான நாமல் பலல்லே, மொஹமட் இர்ஷதீன் மற்றும் ஆதித்ய பட்டபெந்திகே ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட மேல் நீதிமன்ற ஆயத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த ஆயம், பிரதிவாதிகளின் சாட்சியங்களைக் கோராமலேயே இருவரையும் விடுவித்தது. மேலும், திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் குறித்து அரச புலனாய்வு சேவை (SIS) குறிப்பிட்ட தகவல்களை வழங்கத் தவறியுள்ளதாகவும், அப்போதைய SIS பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன தனது கடமைகளை முறையாகச் செய்யத் தவறிவிட்டதாகவும் சுட்டிக்காட்டியதுடன், பிரதிவாதிகளின் குற்றவியல் நோக்கத்தை நிரூபிக்க வழக்குத் தொடுனர் தரப்பு தவறிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது.
மேல் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை சவால் செய்து சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். நவம்பர் 5, 2024 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், இரு பிரதிவாதிகளையும் விடுவித்த மேல் நீதிமன்றத்தின் முடிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததுடன், வழக்கில் பாதுகாப்புத் தரப்பு சாட்சியங்களை மீண்டும் பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதற்கமைய, மீண்டும் விசாரணைகளை மேற்கொண்ட கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. இதேவேளை, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
