Headlines

இன்று காலை 9 மணி முதல் களுத்துறை மற்றும் கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு; பிலியந்தலவில் 16 மணித்தியாலங்கள் தடை.

செய்தி அறிக்கை:

கந்தானை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசியப் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் காரணமாக, களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று (04) செவ்வாய்க்கிழமை நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இந்தத் திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடையானது மொரட்டுவ, பாணந்துறை, பண்டாரகம, ஹொரண, கும்புக்க, இங்குரிய மற்றும் பிலியந்தல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பல பகுதிகளைப் பாதிக்கும் எனச் சபை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேசங்களின் அடிப்படையில் நீர் விநியோகம் தடைப்படும் நேர அட்டவணை பின்வருமாறு அமையும்:

  • மொரட்டுவ மற்றும் பாணந்துறை: இன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை (05 மணித்தியாலங்கள்).
  • பண்டாரகம: இன்று காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை (12 மணித்தியாலங்கள்).
  • ஹொரண, கும்புக்க மற்றும் இங்குரிய: இன்று மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை (05 மணித்தியாலங்கள்).
  • பிலியந்தல: இன்று (04) மாலை 4.00 மணி முதல் நாளை (05) புதன்கிழமை காலை 8.00 மணி வரை (16 மணித்தியாலங்கள்) நீர் விநியோகம் தடைப்பட்டிருக்கும்.

பராமரிப்பு வேலைகள் முடிவடைந்ததும் நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என்றாலும், குறிப்பிட்ட காலப்பகுதியில் நீர் விநியோகத் தடை ஏற்படும் என்பதால், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான நீரினை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் 1939 என்ற 24 மணிநேர அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்புகொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *