Headlines

நெடுந்தீவில் தரைதட்டிய இந்திய படகு; 11 மீனவர்களை மீட்க இலங்கை கடற்படை நடவடிக்கை.

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, சீரற்ற வானிலை காரணமாக நெடுந்தீவு அருகே பவளப்பாறையில் மோதி தரைதட்டிய இந்திய மீன்பிடி இழுவைப்படகை மீட்கும் மற்றும் உதவி வழங்கும் நடவடிக்கையை இலங்கை கடற்படை ஆரம்பித்துள்ளது.

நேற்று மாலைக்கும் இன்று அதிகாலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் நிலவிய மோசமான வானிலைக்கு மத்தியில், குறித்த இழுவைப்படகு சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக நுழைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக, இழுவைப்படகு நெடுந்தீவு கடற்கரையோரம் உள்ள பவளப்பாறையில் மோதி தரைதட்டியுள்ளது.

குறித்த படகில் சுமார் 11 இந்திய மீனவர்கள் இருப்பதாகவும், படகு பவளப்பாறையில் மோதியதில் பகுதியளவு கட்டமைப்பு சேதமடைந்து படகுக்குள் நீர் புக ஆரம்பித்துள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நிலைமை இன்னும் ஆபத்தான நிலையை எட்டவில்லை எனவும், மீனவர்களுக்கு உடனடியாக ஆபத்து எதுவும் இல்லை எனவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது. மீனவர்களைப் பத்திரமாக மீட்பதற்காக இலங்கை கடற்படைப் பிரிவுகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *