Headlines

நாளை ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை; நாடளாவிய ரீதியில் 2,723 நிலையங்களில் ஏற்பாடுகள் தயார்!

இந்த ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை (09) நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்கா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

இம்முறை பரீட்சைக்கு மொத்தம் 294,089 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளனர். அவர்களில் 220,366 மாணவர்கள் சிங்கள மொழி மூலத்திலும், 73,723 மாணவர்கள் தமிழ் மொழி மூலத்திலும் பரீட்சை எழுதவுள்ளனர்.

பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்கள் கடந்த ஆகஸ்ட் 5ஆம் திகதி நள்ளிருடன் முடிவடைந்தன. பரீட்சை முடிவடையும் வரை அச்சு அல்லது மின்னணு ஊடகங்கள் ஊடாக புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விளம்பர நடவடிக்கைகளை முன்னெடுப்பது முற்றுமுழுதாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பரீட்சை நிலையங்களுக்குள் பெற்றோர்கள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணவர்கள் மன உளைச்சலின்றி, இலகுவாக பரீட்சைக்குத் தோற்றுவதற்கு ஏதுவாக, பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக அந்தந்த பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நாளை காலை முதலில் பகுதி II வினாத்தாள் 9:30 மணி முதல் 10:45 மணி வரை வழங்கப்படும். சிறு இடைவேளையின் பின்னர், பகுதி I வினாத்தாள் காலை 11:15 மணி முதல் மதியம் 12:15 மணி வரை நடைபெறும்.

பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை கவனமாகப் படித்து, தங்களது சுட்டெண்களை (Index Numbers) துல்லியமாக எழுத வேண்டும் என்றும், வினாத்தாளிலேயே தெளிவான கையெழுத்தில் நேரடியாக விடையளிக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், பரீட்சை மண்டபத்திற்குள் கைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள் (smartwatches), குறிப்புக்கள் அல்லது வேறு எந்த மின்னணு சாதனங்களையும் கொண்டு செல்வது முற்றுமுழுதாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *