தங்காலையில் 625 கிலோ போதைப்பொருள், T-56 மீட்பு: 2 சடலங்கள் கிடந்த வீட்டுடன் தொடர்பு!
தங்காலை: தங்காலையில் இன்று (22) மேற்கொள்ளப்பட்ட ஒரு பாரிய சுற்றிவளைப்பில், மூன்று லொறிகளிலிருந்து 245 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 380 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவற்றுடன், ஐந்து கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு T-56 ரகத் துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது.
சீனிமோதரவில், புனரமைக்கப்பட்டு வந்த வீடு ஒன்றில் இரண்டு சடலங்கள் இன்று காலை கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த மெகா வேட்டை ஆரம்பமானது. அந்த வீட்டிலிருந்து 10 கிலோகிராம் ‘ஐஸ்’ மீட்கப்பட்டதுடன், அருகில் நிறுத்தப்பட்டிருந்த லொறிகளைச் சோதனையிட்டபோதே, இந்தப் பாரிய போதைப்பொருள் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டது.
பெரும்பாலான போதைப்பொருட்கள் ஒரு பெரிய லொறியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக, தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்தார். நாட்டின் சமீபத்திய வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் மீட்பு நடவடிக்கையாகும். இந்த குற்றச் செயல்களின் பின்னணி குறித்துத் தீவிர விசாரணைகள் தொடர்கின்றன.
